திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வத்திப்பட்டி கிராம விவசாயிகள் தங்களது தொழில் திறமையை விவசாயத்தில் புகுத்தி சாதனை படைத்து வருகின்றனர். இவர்கள் இயற்கை உரத்தை பெருமளவு பயன்படுத்துகின்றனர். இதனால், இங்கு விளைவிக்கப்படும் பயிர்கள் செழுமையாகவும், உயிர்ச்சத்துக்கள் நிறைந்ததாகவும் விளங்குவதாக வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வத்திப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சி. ஆண்டிச்சாமி,65. இவர், தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் நிதிப்பிரிவு இணை செயலராக 34 ஆண்டுகள் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்போது விவசாயத்தில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். வத்திப்பட்டியை பப்பாளி கிராமமாக மாற்றிய பெரும்பங்கு இவருக்குண்டு. அவர் கூறியதாவது:
- தமிழகத்தில் சப்னா (மஞ்சள் நிறம்), ரெட் லேடி (சிவப்பு நிறம்), ரெட் ராயல் (சிவப்பு நிறம்), சிந்தா (மஞ்சள் நிறம்) என நான்கு வகையான ஒட்டுரக பப்பாளிகள் விளைவிக்கப்படுகிறது.
- இதன் விதை 100 கிராம் ரூ.3,500. 100 கிராம் எடைக்கு சுமார் 1000 விதைகள் இருக்கும்.
- சப்னா, சிந்தா வகை பப்பாளிகள் எண்ணெய் நாடுகளான குவைத், துபாய் நாடுகளுக்கு பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- இந்த விவசாயத்தில் முறையான வகையில் ஈடுபட்டால் ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வரை லாபம் கிடைக்கும்.
- கிணற்றுப்பாசனம் மூலம் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை பப்பாளி வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறோம்.
- ஆண்டு தோறும் மாசியில் நடவு செய்ய வேண்டும்.
- 45 நாட்களுக்கு பின் விளைச்சல் கிடைக் கும்.
- 8 முதல் 14 மாதங்கள் வரை காய்கள் கிடைக்கும்.
- இயற்கை உரம் பயன்படுத்தினால் நல்ல விளைச்சல் காணலாம்.
- மார்க்கெட் மதிப்புக்கு ஏற்ப கிலோ ரூ.8 முதல் ரூ.9 வரை விற்கலாம்.
- சிந்தா வகை பப்பாளியை கர்நாடக மாநில பழ வியாபாரிகள் அதிகளவு கொள்முதல் செய்கின்றனர். நான், சகோதரர்கள் உட்பட சிலர் பப்பாளி விவசாயத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறோம், என்றார்.
தொடர்புக்கு சி.ஆண்டிச்சாமி, ஓய்வு பெற்ற தலைமை செயலக இணை செயலர், வத்திப்பட்டி கிராமம், நத்தம் வட்டாரம், திண்டுக்கல் மாவட்டம்.