தென்னையில் அதிக விளைச்சல் பெறும் வழிமுறைகள்

தேங்காயின் விலை முந்தைய காலகட்டத்தை விட அதிகமாக இருக்கிறது. அதிக
விளைச்சல் இருக்கும் நிலையில் குறைந்த விலையில் தேங்காய்கள் கிடைக்கும்
படி செய்யலாம். பணப்பயிர்களில் அமுதசுரபி போல் திகழும் தேங்காய்களை அதிக விளைச்சல் மூலம் பெற்றிட விவசாயிகள் சரியான உரநிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கு இயற்கை உரங்களான தொழுஉரம், வேப்பம் புண்ணாக்கு மற்றும் இலுப்பை புண்ணாக்கு போன்றவற்றுடன் கலந்து ஆண்டுக்கு ஓரிரு முறைகள் இடுவதன் மூலம் அதிகமான விளைச்சலை உறுதி செய்யலாம்.

ரசாயன உரங்களில் பலவகை சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒரு சில சத்துக்களே தென்னையில் வளர்ச்சிக்கு அவசியமாக இருக்கின்றன. இதில்
மணிச்சத்து முக்கியமானது. பலவாறாக இருக்கும் ரசாயன உரங்களில் மணிச்சத்து அடங்கியிருந்தாலும், சூப்பர் பாஸ்பேட் உரத்தில் அடங்கியிருக்கும்
மணிச்சத்தானது நிலத்திற்கு எந்த வித கெடுதலையும் செய்யாமல் தென்னைக்கு
ஊட்டமளிக்கிறது. சூப்பர் பாஸ்பேட்டில் மணிச்சத்துடன் தென்னை
வளர்ச்சிக்கும், நல்ல காய்பிடிப்பிற்கும் அவசியமான கந்தகம், சுண்ணாம்பு,
போரான், குளோரின் மற்றும் சோடியம் சத்துக்களும் வேறு பல நுண்ணூட்ட
சத்துக்களும் அடங்கியுள்ளன.
இந்த சத்துக்களில் உள்ள சத்துக்கள் தென்னையின் வளர்ச்சியில் என்ன
செய்கின்றன என்று பார்க்கலாம்.
மணிச்சத்து 16 சதவீதம்
இந்த சத்தானது, தென்னை நாற்றிலிருந்து முளைத்து வரும் குருத்தின் பருமனை
அதிகரிக்கவும், குருத்திலிருந்து அதிக இலைகள் உற்பத்தியாவதற்கும்
உதவுகிறது. மேலும் தென்னையில் அதிகமான வேர்கள் உருவாகவும், வேர்கள் ஆழமாக நிலத்தில் சென்று பிடிப்பை ஏற்படுத்தவும் உதவுகிறது. இதனால் மரத்தின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.
பாளையில் ஏராளமான பூக்கள் உருவாகவும், அவ்வாறு பூத்த பூக்கள் அனைத்தும்
தரம் மிக்க காய்களாக மாறுவதற்கும் உதவி செய்கிறது.
தேங்காய் குறுகிய காலத்தில் முற்றவும், கொப்பரையின் பருமனை அதிகரிக்கவும்
உதவுகிறது.
கந்தகச்சத்து 11 சதவீதம்
கந்தக சத்தானது தேங்காய் பருப்பு ரப்பர் போன்று ஆகிவிடாமல் கெட்டியாக
உருவாக உதவுகிறது.
கொப்பரையில் எண்ணெயின் அளவு கணிசமாக அதிகரிக்க உதவுகிறது. சூப்பர்
பாஸ்பேட் இடப்படாத தென்னையில் கந்தகச்சத்து குறைபாட்டினால் கொப்பரையில் எண்ணெய்ச்சத்து குறைந்து சர்க்கரை சத்து மட்டுமே அதிகமாக இருக்கும்.
சுண்ணாம்பு சத்து
சுண்ணாம்பு சத்தினால் மரம் வலிமையாக உருவாகும். மேலும் இந்த சத்தானது
மரத்தின் கட்டமைப்பில் உள்ள செல்களின் சுவர்களின் அமைப்பில், வேர்களின்
வளர்ச்சியில், சர்க்கரை மற்றும் தனிமங்களின் கடத்திலில் பெரும் பங்கு
வகிக்கிறது.
மேலும் நொதிப்பொருட்களின் வினையாக்கத்தை தூண்டி தென்னையின் சீரான
வளர்ச்சிக்கு அதிகரிக்கிறது. தென்னை பயிரிடப்படும் மணற்பாங்கான அமில வகை நிலங்களில் சுண்ணாம்பு சத்தானது  தழை, மணிச்சத்து மற்றும் சாம்பல்
சத்துக்களை நல்ல முறையில் கிரகிக்க வழி செய்கிறது.
இது தவிர சூப்பர் பாஸ்பேட்டில் அடங்கியுள்ள தனிமச்சத்துக்களான போரான்,
குளோரின் மற்றும் சோடியம் போன்றவை தென்னை வளர்ச்சிக்கு அதிக
பங்களிக்கின்றன. இந்த சத்துக்களில் போரான் என்ற தனிமச்சத்து, இலைகள்
நன்றாக வெளிவரவும், ஓலைகள் திடமாக இருக்கவும், தேங்காய்கள் பருத்து
பருப்பின் அளவு அதிகரிக்கவும் உதவுகின்றது.
குளோரின் சத்தானது தழை, மணி, சாம்பல் மற்றும் மக்னீசிய சத்துக்களை தென்னை சீரான அளவில் எடுத்துக் கொள்வதற்கு உதவுகிறது.
இதில் உள்ள சோடியம் தென்னையின் தொடக்க கால வளர்ச்சியை தூண்டவும், வளர்ந்த தென்னையில் பெண்பூக்கள் அதிகமாக உற்பத்தியாவதற்கும், அவை மகரந்த சேர்க்கைக்கு பின் தரமான குரும்பைகளாக உருவாவதற்கும் உதவுகின்றது.
தென்னைக்கு உரமிடும் முறை
தென்னையை நட்ட முதலாம் ஆண்டில் யூரியா 500 கிராம், சூப்பர் பாஸ்பேட்
500கிராம், பொட்டாஷ் 825 கிராம், வேப்பம் புண்ணாக்கு 1250 கிராம்,
தொழுஉரம் 10 கிலோ என்ற அளவில் இடவேண்டும். இரண்டாவது ஆண்டில் யூரியா 1300 கிராம், சூப்பர் பாஸ்பேட்800 கிராம், பொட்டாஷ் 1625 கிராம், வேப்பம்
புண்ணாக்கு இரண்டரை கிலோ, தொழுஉரம் 2 கிலோ என்ற அளவிலும், மூன்றாம்
ஆண்டில் யூரியா 1600 கிராம், சூப்பர் பாஸ்பேட் 1200 கிராம், பொட்டாஷ்
இரண்டரை கிலோ, வேப்பம் புண்ணாக்கு 3 கிலோ 750 கிராம், தொழுஉரம்
3கிலோவும், நான்காம் ஆண்டில் யூரியா 2கிலோ, சூப்பர் பாஸ்பேட் 1 கிலோ 600
கிராம், பொட்டாஷ் 3கிலோ 300 கிராம், வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ மற்றும்
தொழுஉரம் 4 கிலோவும் இடவேண்டும்.
நான்கு ஆண்டுகளுக்கு மேற்பட்ட தென்னைக்கு யூரியா 2 கிலோவும், சூப்பர்
பாஸ்பேட் 1 கிலோ 600 கிராமும், பொட்டாஷ் 3 கிலோ 300 கிராம், வேப்பம்
புண்ணாக்கு 5 கிலோ மற்றும் தொழுஉரம் 5 கிலோவும் இட வேண்டும். குறிப்பாக
இந்த உரங்களை ஜுலை, ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பாதியையும், அக்டோபர் மாதத்தில் மறுபாதியையும் இடவேண்டும்.

இந்த அடிப்படையில் தென்னைக்கு உரங்களை இட்டு வந்தால் மரத்தின் விளைச்சல் தொடர்ந்து அதிகரிக்கும். விவசாயிகள் நல்ல லாபத்தை பெறலாம்.
தகவல்:  ஜி.எஸ்.வி அமுதன்,மதுரை.

Leave a Reply