ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய 30 கிலோ விதை நெல் பயன்படுத்தும் காலத்தில் கால் கிலோ விதை நெல்லில் ஒரு ஏக்கர் நடவு செய்து சாதனை படைத்து வருகிறார் விவசாயி ஆர்.பெருமாள்.
ஒற்றை நாற்று நடவு முறையில் சாகுபடி செய்து வரும் பெருமாள் 50 செ.மீ. நீளம், 50 செ.மீ. அகலம் (50X50) என்ற அளவில் ஒரு குத்துக்கு ஒரு நாற்று மட்டுமே போதுமானது” என்கிறார்.
நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் உள்ள ஆலங்குடியைச் சேர்ந்தவர் பெருமாள். தொடக்கத்தில் மற்ற விவசாயிகளைப் போலவே அதிக விதை நெல்லைப் பயன்படுத்திதான் இவரும் விவசாயம் செய்தார். பின்னர் விதையின் அளவைக் குறைத்து சாகுபடி செய்யத் தொடங்கினார். தனது அனுபவத்தின் மூலம் படிப்படியாகக் குறைத்துக் கொண்டே வந்து கடந்த 2011 முதல் ஏக்கருக்கு கால் கிலோ விதைநெல் மட்டுமே பயன்படுத்துகிறார்.
தனது சாகுபடி முறை குறித்து விவரித்த பெருமாள், “ஒற்றை நாற்று நடவு முறைக்கு பெரும்பாலும் எல்லா விதை ரகங்களும் ஏற்றவையே. 3 சென்ட் பரப்புள்ள நாற்றாங்காலில் 250 கிராம் (கால் கிலோ) விதையை விதைக்க வேண்டும். 20-ம் நாளில் நாற்றை பறித்து 50 செ.மீ.X50 செ.மீ. என்ற அளவில் ஒரு குத்துக்கு ஒரு நாற்றை மட்டுமே நடவு செய்ய வேண்டும்.
இவ்வாறு நடவு செய்யும்போது ஒரு குத்துக்கு 60 முதல் 120 கதிர்கள் வரையிலும் கிடைக்கும். ஒரு குத்தில் 200 கிராம் முதல் 350 கிராம் வரை விளைச்சல் இருக்கும். இவ்வாறு சாகுபடி செய்ததில் எனக்கு ஏக்கருக்கு 4 டன் மகசூல் கிடைத்துள்ளது” என்கிறார்.
வழக்கமான முறையில் ஒவ்வொரு குத்திலும் அதிக நாற்றுகளை வைத்தும், மிக நெருக்கமாகவும் நடும்போது பெரும்பாலும் ஏக்கருக்கு 2 முதல் 3 டன் வரை மட்டுமே மகசூல் கிடைக்கும்.
ஆனால் மிகவும் குறைவான நாற்றுக்களை நன்கு இடைவெளிவிட்டு நடும்போது 4 ஏக்கர் வரை மகசூல் கிடைக்கிறது என்ற விவசாயி பெருமாளின் அனுபவம் மற்ற விவசாயிகளுக்கு பெரும் வழிகாட்டுதலாக உள்ளது.
ஒற்றை நாற்று நடவால் ஏற்படும் பயன்கள்
- ஒற்றை நாற்று நடும்போது பயிரில் அதிக வேர் வளர்ச்சி இருக்கும்.
- நிறைய தூர் வெடித்து அதிக கதிர்கள் கிடைக்கும்.
- பூச்சித் தாக்குதல் குறையும்.
- குறிப்பாக புகையான் பூச்சித் தாக்குதல் அறவே இருக்காது.
- எந்த சூழலிலும் பயிர் கீழே சாயாது.அதிக கதிர்களும், கதிர்களில் அதிக நெல்மணிகளும் கிடைப்பதால் விளைச்சல் அதிகரித்து விவசாயி களுக்கு லாபமும் அதிகரிக்கும்.
- மேலும் விதைச் செலவு, நாற்றங்கால் தயார்படுத்தும் செலவு, நடவு செலவு, களையெடுக்கும் செலவு, உரம், பூச்சிக்கொல்லிகள் வாங்கும் செலவு என எல்லாவித செலவுகளும் மிகக் கணிசமாகக் குறைகின்றன.
- களை எடுத்தலும் மிக எளிது.
- நன்கு இடைவெளி இருப்பதால் எலித் தொல்லை இருக் காது.
- அவ்வாறு எலி இருந்தாலும், பாம்புகள் அவற்றை துரத்திப் பிடிப் பதற்கு வசதியாக நல்ல இடவசதி இருப்பதால் எலிகளின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு ஒற்றை நாற்று நடவு முறையில் ஏராளமான பயன்கள் உள்ளன.
தனது அனுபவம் குறித்து பெருமாள் மேலும் கூறும்போது, “கால் கிலோ விதை நெல்லில் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்வது குறித்து 2011-ம் ஆண்டு வேளாண்மைத் துறை அதிகாரிகள், வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர்கள், முன்னோடி விவசாயிகள், பத்திரிகையாளர்கள் பலர் எனது வயலுக்கு வந்து ஒற்றை நாற்று சாகுபடியை நேரில் பார்த்தனர்.
விதைப்பு முதல் அறுவடை வரை எனது சாகுபடி முறையை நேரடியாகக் கண்காணித்த வேளாண்மைத் துறை அதிகாரிகள் கால் கிலோ விதை நெல்லில் ஒரு ஏக்கர் நடவு செய்து, 4 டன் வரை மகசூல் கண்ட எனது சாதனை குறித்து அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இப்போது தமிழ்நாடு முழுவதும் எனது ஒற்றை நாற்று சாகுபடி அனுபவம் குறித்து விவசாயிகள் மத்தியில் பேசி வருகிறேன். பல மாவட்டங்களில் ஆட்சியர்களே விவசாயிகள் மத்தியில் பேசுவதற்காக என்னை அழைக்கின்றனர்” என்றார்.
ஆர்வமுள்ள விவசாயிகள் 09486835547 என்ற செல்போன் எண்ணில் பெருமாளை தொடர்பு கொள்ளலாம்-