தர்மபுரி மாவட்டத்தில், நிலங்களில் களையை கட்டுப்படுத்த, விவசாயிகள் நிழற்போர்வை அமைக்க, ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, தக்காளி, மா, கரும்பு, துவரை, பருத்தி, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், காய்கறி பயிர்கள் மற்றும் மலர் சாகுபடி முக்கிய பங்கு வகித்து வருகிறது.பட்டன் ரோஸ், சாமந்தி, சம்மங்கி, கோழிக்கொண்டை, மல்லிகை, முல்லை உள்ளிட்ட மலர்கள் குறிப்பிட்ட பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
மலர் சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைத்து வந்த போதிலும், களை எடுத்தல், பூச்சி கொல்லி மருந்து உள்ளிட்டவைகளுக்கு, அதிக செலவு செய்யும் நிலை ஏற்பட்டு வருகிறது.இதை தடுக்க, பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள், பசுமை குடில் மூலம், மலர் செடிகளை வளர்த்து வருகின்றனர்.
பல விவசாயிகள், களை மற்றும் நிலங்களில் இருந்து, தண்ணீர் அதிகளவு உறிஞ்சப்படுவதை தடுக்க, விவசாய நிலங்களில், நிழற் போர்வை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து ஆலிவாயன்கொட்டாயை சேர்ந்த விவசாயி வேடியப்பன் கூறியதாவது:
- தர்மபுரி மாவட்டத்தில், சில ஆண்டுகளாக, பருவ மழை பொய்த்ததால், விவசாய கிணறுகளில் நீர் மட்டம் குறைந்தது. இதனால், விவசாயிகள் கிணறுகளை ஆழப்படுத்தி வருகின்றனர்.
- சில விவசாயிகள், குறைந்த தண்ணீரில், விவசாய பயிர்களை சாகுபடி செய்ய, சொட்டு நீர் பாசனம் அமைத்து வருகின்றனர்.
- பட்டன் ரோஸ் உட்பட பல்வேறு மலர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, மலர் செடிகளுக்கு, தென்னை நார் கொட்டியும், அதன் மீது பாலிதீன் கவர் மூலம் நிழற் போர்வை அமைத்து வருகின்றனர்.
- விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையுள்ள நிலையில், நிழற்போர்வை அமைப்பதன் மூலம், களைகளை கட்டுபடுத்த முடிகிறது.
- ஒரு ஏக்கர் பட்டன் ரோஸ் செடிகளுக்கு நிழற் போர்வை அமைக்க, 10 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. தோட்டக்கலைத்துறையினர், நிழற் போர்வை அமைக்க தேவையான, பாலிதீன் கவர்களை, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
- இதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருவதால், பெரும்பாலன விவசாயிகள், இலவசமாக பாலிதீன் கவர்களை வாங்க முடியாத நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.