கரும்புத் தோகையில் மக்கிய உரம் தயாரிப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமானம் அடையலாம் என்று காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ. முருகன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் விவசாயிகளுக்கு கூறிய அறிவுரை:
- கரும்புப் பயிரில் ஒரு பருவத்தில், 1 ஹெக்டருக்கு 10 முதல் 12 டன் வரை உலர்ந்த இலைகள் கிடைக்கின்றன.
- 5-ஆவது, 7-ஆவது மாதமானலும் கரும்புப் பயிரிலிருந்து உலர்ந்த பயனற்ற இலைகளை நீக்கும் பருவம் ஆகும்.
- உலர்ந்த இலையில் 28.6 சதவீதத்தில் கரிமச் சத்தும், 0.35 முதல் 0.42 சதவீதம் தழைச்சத்தும், 0.04 முதல் 0.15 சதவீதம் மணிச்சத்தும், 0.40 முதல் 0.50 சதவீதம் சாம்பல் சத்தும் உள்ளது.
- எனவே, உலர்ந்த கரும்புத் தோகையை மக்கிய உரமாக்கி மண்ணில் இடுவதால், மண்ணின் இயற்பியல், வேதியியல், உயிரியல் தன்மை மேம்படுகிறது.
- இதனால், மண்ணின் மின் கடத்தும் திறன் குறைந்து, நீரைத் தக்க வைக்கும் திறன் அதிகரிக்கிறது. மேலும், மண்ணின் அங்ககத் தன்மை அதிகரித்து ஊட்டச்சத்துகளின் அளவும் அதிகரிக்கிறது.
தயாரிக்கும் முறை:
- உலர்ந்த கரும்புத் தோகைகளை ஒன்றாக சேகரித்து மக்கிய உரம் தயாரிக்கும் இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
- மக்கிய உரம் தயாரிப்பதற்கு குழி எடுக்கத் தேவையில்லை. மண்ணின் மேற்பரப்பிலேயே தயாரிக்கலாம்.
- உலர்ந்த கரும்புத் தோகையை சிறுசிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். 1 டன் கரும்புத் தோகைக்கு 2 கிலோ பயோ மினரலைசர் என்ற நுண்ணுயிரிகளின் கூட்டுக் கலவையைப் போட வேண்டும்.
- 1 டன் தோகைக்கு 50 கிலோ சாணத்தை 100 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
- மேலும், 5 கிலோ ராக் பாஸ்பேட்டை ஒரு டன் கழிவுக்கு சேர்ப்பதால் மணிச்சத்தின் அளவு உயர்த்தப்படுகிறது.
- அனைத்து இடுபொருள்களையும் இட்டபின், கழிவுகளை குவியல்களால் உருவாக்க வேண்டும்.
- இது 4 அடி உயரத்துக்கு இருந்தால் நல்லது. குவியல் கழிவுகளை 15 நாள்களுக்கு ஒரு முறை கிளரிவிட வேண்டும்.
- காற்றோட்டம் இருந்தால் மட்டுமே நன்றாக மக்கும். குவியல் கழிவுகளில் 60 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
- ஈரப்பதம் குறைந்தால் அதில் உள்ள நுண்ணுயிரிகள் அனைத்தும் இறந்து விடும்.
- குறைவான அளவு, மண் வாசனை, பழுப்பு கலந்த கருமை நிறம் இவை மக்குதல் முதிர்வை கண்டறிய உதவும்.
- இந்த நிலை அடைந்தவுடன், மக்கிய உரத்தைப் பிரித்து உலர விட வேண்டும். மக்கிய உரத்துடன் நுண்ணுயிர்களான அசட்டோபாக்டர், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் கலப்பதால் அவை மேலும் ஊட்டமேற்றப்படுகின்றன.
இந்த செறிவூட்டப்பட்ட மக்கிய உரத்தை ஹெக்டருக்கு 5 டன் என்ற அளவில் கரும்புப் பயிருக்கு பரிந்துரைக்கப்படுகிறது.