இயற்கை முறையில் சாமை சாகுபடி

சாமை-1050x600

மண் வளம் குறைந்த மானாவாரி நிலங்களில் கூட சிறுதானியங்களை பயிரிடலாம். இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. குறிப்பாக சாமையை விவசாயிகள் எளிதாக பயிரிடலாம்.

சிறுதானியங்கள் என்பவை பொதுவாக குறுகிய பயிர்களாகும். இவை தானிய பயிர்களாகவும், தீவனப் பயிர்களாகவும், தொழிற்சாலை பயன்பாட்டுக்காகவும் பயிரிடப்படுகின்றன. இந்த பயிர் வறட்சி மற்றும் மித வறட்சி பகுதிகளிலும், அனைத்து பருவகால மாற்றங்களையும் தாங்கி வளரக்கூடியவை. சிறுதானியங்களின் உற்பத்தியை பெருக்க, விதை பெருக்கத் திட்டம், எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள்,எண்ணெய் பனை மற்றும் மக்காச்சோளம் ஒருங்கிணைந்த திட்டம், தீவிர சிறுதானிய சாகுபடி, சிறுதானிய விரைவு திட்ட அணுகுமுறை, மானாவாரி நிலங்களின் வளர்ச்சி திட்டங்கள், விதை கிராம திட்டம் போன்ற திட்டங்கள் உள்ளன. விவசாயிகள் இந்த திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு சிறு தானியங்களை பயிரிடலாம்.

இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதிக அளவு அரிசியை மட்டுமே உட்கொள்ளுவதால் நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிலையில் அரிசிக்கு பதிலாக மாற்று உணவை உண்ண வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அரிசி மற்றும் கோதுமையை விட சிறுதானியங்களில் ஊட்டச்சத்து அதிகம் இருப்பதால் அவற்றை உட்கொள்வது நல்லது. சிறுதானியங்களின் மகத்துவத்தை நுகர்வோர் உணர்ந்து வருவதால் சிறுதானியங்களுக்கான தேவையும் பெருகிவருகிறது. மேலும் விவசாயிகள் சிறுதானியங்களை பயிரிடுவதால் நல்ல லாபம் பெறலாம்.

சாமையின் ரகங்கள்:

கோ 3, கோ (சாமை4), பையூர்2, கோ1 ஆகிய ரகங்கள் உள்ளன.

பருவம்:

ஆடி மற்றும் புரட்டாசி பட்டங்களில் பயிரிடலாம்.

நிலம் தயாரித்தல்:

சித்திரை வைகாசி மாதங்களில் இறக்கை கலப்பை அல்லது மரக்கலப்பை கொண்டு இரண்டு முறை நன்கு ஆழமாக உழுது நிலத்தை சமன் செய்ய வேண்டும்.

விதையளவு:

கை விதைப்பு முறை மூலம் விதைக்கும் போது ஏக்கருக்கு 12.5 கிலோ விதை தேவைப்படும்.

கொர்து அல்லது விதைப்பான் கொண்டு வரிசை விதைப்பு செய்யும் போது ஏக்கருக்கு 10 கிலோ விதை தேவைப்படும்.

இடைவெளி:

பயிர் இடைவெளியானது 22.5 செ.மீ – 7.5 செ.மீ இருக்க வேண்டும்.

உர நிர்வாகம்:

ஒரு ஏக்கர் நிலத்தில் 5 டன் மட்கிய தொழு உரத்தை கடைசி உழவின் போது பரப்பி, பின்னர். உழ வேண்டும். தழை மணிசத்துக்களை ஏக்கருக்கு முறையே 44:22 கிலோ அளவில் இட வேண்டும்.

களை நிர்வாகம்:

வரிசை விதைப்பு செய்திருந்தால் இரண்டு முதல் மூன்று முறை இடை உழவு செய்து பின் ஒரு முறை கையினால் களையெடுக்க வேண்டும் . கை விதைப்பு முறையில் இரண்டு முறை கையினால் களையெடுக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்:

சாமைப் பயிர் நன்கு வளர்வதற்கு 300 முதல் 350 மீ.மீ. மழை அளவு தேவைப்படும். பயிர் வளர்ச்சிப் பருவத்தில் விதைப்பு நீர், பூக்கும் பருவம், பால் பிடிக்கும் பருவங்களில் கட்டாயம் மண்ணில் ஈரப்பதம் இருக்க வேண்டும்.

பயிர் களைதல்:

முதல் களை எடுத்தவுடன் அல்லது விதைத்த 20 – ம் நாளில் மானாவாரி பயிரில் வரிசைக்கு வரிசை 22.5 செ. மீ மற்றும் செடிக்கு செடி 7.5 செ. மீ வைத்து பயிர் களைய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

இந்த பயிரை பொதுவாக எந்த நோயும் தாக்குவதில்லை. குருத்து ஈ சாமையை தாக்கி விளைச்சலை மிகவும் பாதிக்கிறது. இந்த பூச்சியை கட்டுப்படுத்த விதைப்பை தள்ளிப்போடாமல் பருவமழை தொடங்கிய உடன் விதைக்கலாம்.

அறுவடை:

கதிர்கள்  நன்கு காய்ந்து முற்றிய பிறகு அறுவடை செய்ய வேண்டும்.

நன்மைகள்:

சாமை பயிர், உடல் அசதி மற்றும் தளர்ச்சியை நீக்கி சுறுசுறுப்பு தரும். எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு பலப்படும். இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு வரும் முதுகுவலியை நீக்க சாமையை அடிக்கடி சாப்பிடலாம். இந்த தகவலை வேளாண்மைத்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply