ஆமணக்கு, நிலக்கடலை, சூரியகாந்தி என ஏகப்பட்ட எண்ணெய் வித்துப் பயிர்கள் இருந்தாலும், அதிகப் பராமரிப்பு இல்லாமல் குறைந்த செலவிலேயே நல்ல வருவாய் தருவது எள் சாகுபடிதான். எள் சாகுபடிக்கு வைகாசி பட்டம் ஏற்றதாக இருக்கும்.
ஏக்கருக்கு 2 கிலோ விதை !
‘அனைத்து மண்ணிலும் எள் வளரும். என்றாலும், வண்டலும் செம்மண்ணும் கலந்த நிலத்தில் நன்றாக வளரும். எள்ளில் வெள்ளை, கருப்பு, சிவப்பு என மூன்று வகைகள் புழக்கத்தில் உள்ளன. சித்திரை மாதத்தில் இரண்டு முறை கோடை உழவு செய்து மண்ணைக் கலைத்துவிட வேண்டும். தொடர்ந்து 10 டன் தொழுவுரத்துடன், அடியுரமாக தழை, மணி, சாம்பல் சத்து கொண்ட 50 கிலோ உரத்தையும் கலந்து இறைத்து விட வேண்டும். பிறகு விதைப்புதான். ஒரு ஏக்கருக்கு, 2 கிலோ விதை தேவைப்படும். சலித்த சுத்தமான மணலை, விதையின் அளவுக்கு சம அளவு கலந்து, சீராக நிலத்தில் தூவி விட வேண்டும். எள் மிகவும் லேசாக இருப்பதால்தான் மணலுடன் கலந்து விதைக்க வேண்டும். பிறகு குச்சியை (கவைக்கோல்) நிலத்தில் இழுத்துச் சென்றால் விதைகள் மண்ணில் அழுந்தப் புதைந்து விடும்.
தண்ணீர் வசதி இருந்தால், விதைத்தவுடன் லேசாக ஒரு பாசனம் செய்யலாம். இல்லாவிட்டாலும், கவலையில்லை. கிடைக்கும் பருவ மழை நீரே போதுமானது. மானாவாரி விவசாயம் போல விதைகள் தூவப்படுவதால் செடிகள் இடைவெளி இல்லாமல், அடர்த்தியாக இருக்கும். இப்படி இருந்தால், செடிகளின் வளர்ச்சி ஒரே சீராக இருக்காது. அதனால், செடிக்குச் செடி 15 செ.மீ இடைவெளி இருப்பதுபோல், செடிகளைக் கலைத்து விட வேண்டும்.
120 நாளில் அறுவடை !
60-ம் நாளில் நன்றாகப் பச்சைகட்டி செடிகள் வளர்ந்து நிற்கும். வெள்ளை நிறப்பூக்கள் செடிகளில் பூத்துக் குலுங்கும். வெயில் சூடு மற்றும் நுண்ணூட்டக் குறைபாடு காரணமாக பரவலாக பூக்கள் உதிரலாம். 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து, அதிகாலை வேளையில் பனிப்புகை போல தெளிக்க வேண்டும். பத்து நாட்கள் இடைவெளியில், இரண்டு முறை இப்படித் தெளித்தால் பூக்கள் உதிர்வது நின்று, செடிகளில் பிஞ்சுகள் பிடிக்கும்.
நோய் தடுக்கும் அஸ்திரங்கள் !
70-ம் நாள் முதல் செடிகளில் காய்கள் குலுங்கத் தொடங்கும். இந்த சமயத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் காய்ப்புழுக்களின் பாதிப்பு அதிகம் இருக்கும். இரண்டு முறை அக்னி அஸ்திரம் தெளித்தால், இவற்றைக் கட்டுப்படுத்தலாம். சில நேரங்களில், சாம்பல் நோயும் தாக்கலாம். இந்நோய் தாக்கிய செடிகளின் தண்டுகள் பழுத்து, பாதியாக ஒடிந்து விழும். 100 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் பிரம்மாஸ்திரம், 2 லிட்டர் கோமியம் ஆகியவற்றைக் கலந்து தெளித்தால், சாம்பல் நோய் கட்டுப்படும்.
90-ம் நாள் தொடங்கி… 120-ம் நாளுக்குள் அறுவடை செய்யலாம். செடிகளில் தொங்கும் காய்களில், ஒரு காயைப் பறித்து பிளந்து பார்த்தால், விதைகள் நிறம் மாறி, முதிர்ந்து காட்சி அளிக்கும். இதுவே அறுவடை செய்ய ஏற்ற தருணம். தகுந்த ஆட்களைக் கொண்டு செடிகளைப் பறித்து, கத்தை கட்டி, சுத்தம் செய்யப்பட்ட களத்துமேட்டில் ‘அம்பாரக் குவியல்’ போட்டு அடுக்கி வைக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் வரை அம்பாரக் குவியலில் காயப் போட வேண்டும். அப்பொழுதுதான் நுனித்தண்டில் இருக்கும் இளம் காய்கள் காய்ந்து முதிர்ச்சி அடையும். பின்னர் அம்பாரக் குவியலைக் கலைத்து செடிகளை களத்துமேட்டில் பரப்பி காய வைக்க வேண்டும். ஒரு வாரத்தில் செடிகள் காய்ந்து விடும். பிறகு, களத்துமேட்டில் கோணி சாக்கு அல்லது தார்பாலினை விரித்து மரக்கட்டை அல்லது பலகை மீது, காய்ந்த செடிகளைத் தட்டினால் காய்களில் இருந்து பதருடன் கலந்து எள் பிரியும்.’
அறுவடை முடிந்து அடித்த எள்ளை காற்றில் தூற்றினால் சுத்தமான எள் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு 400 முதல் 500 கிலோ வரைக்கும் மகசூல் கிடைக்கும்.
good news
arumai nandri., viraivil meendum vivasayam seivom