வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் விவசாய தேவைக்காக ‘எருக்கம் செடி’ அறுவரை தீவிரமாக தொடங்கியுள்ளது.
விவசாயத்திற்கு பெயர் போன வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதியில் கடும் வறட்சிக்கு இடையேயும் விவசாய பணியை தொடங்கியுள்ளனர்.
செயற்கை உரங்கள் விவசாயத்தை ஆக்கிரமித்தாலும் அடிப்படையில் இயற்கை உரங்கள் தவிர்க்க முடியாததாகவே உள்ளன. அதற்கு ‘எருக்கம் செடி’ உரம் தான் விவசாயிகளின் பாரம்பரிய ‘சாய்ஸ்’.
- காசு செலவில்லை, பயணங்கள் தேவையில்லை, வயல்வெளிகளில் நடந்தால் வேண்டிய எருக்கம் செடி கிடைக்கும்.
- தேவை அதிகம் என்பதால், அவற்றை சேகரிப்பதில் தான் விவசாயிகளிடையே போட்டி.
- பூத்துக்குலுங்கும் எருக்கம் செடிகளை அறுவடை செய்து, அவற்றை தரிசு நிலங்களில் பரப்புகின்றனர்.
- செடி காய்ந்து மக்கியதும் நிலத்தை உழுது மண்ணுக்கு உரமாக பயன்படுத்துகின்றனர்.
- இந்த அடிப்படைப் பணி தான் நாம் உண்ணும் உணவுக்கு மூலதனம்.
- வாடிப்பட்டி-சோழவந்தான் ரோட்டின் வழிநெடுகிலும் அறுவடை செய்த எருக்கம் செடிகள் குவிக்கப்பட்டிருப்பதை காணமுடிகிறது.
- இதற்காக கூலிக்கு வேலையாட்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். நபர் ஒன்றுக்கு ரூ.120 முதல் கூலி கிடைக்கிறது.
அறுவடைப் பணியிலிருந்த கற்பகம் கூறும் போது, ”பூத்த எருக்கம் செடிகள் தான் உரத்திற்கு நல்லது. அவற்றை அறுவடை செய்வது எளிதல்ல. வெட்டும் போது அதிலிருக்கும் பால் தெறித்தால், பார்வையே போய்விடும். அதையெல்லாம் கடந்து விவசாயத்தில் எருக்கம் செடியின் அவசியம் உணர்ந்து தான் இந்தப் பணியை செய்து வருகிறோம். மண் வளமாக இருந்தால் தான் விவசாயம் செழிப்பாக இருக்கும்,” என்றார்.