இஞ்சி வளர்ப்பு – இயற்கை வேளாண்மையில் இஞ்சி சாகுபடி

இஞ்சி சாகுபடியில் நிலத்தின் வளம்/நலம் பேணுவது மிக முக்கிய செயலாகும். நிலத்தில் அங்ககப் பொருட்களின் அளவு கூடுதலாக இருப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக கால்நடைக் கழிவுகளான தொழுஉரம் அல்லது ஆட்டுக்குப்பை அல்லது நன்கு தயாரிக்கப்பட்ட கம்போஸ்ட் அல்லது மண்புழு உரம் நிலத்தில் கடைசி உழுவில் இட வேண்டும். கம்போஸ்ட் அல்லது தொழு உரமாக இருப்பின் ஏக்கர் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் பயன்படுத்த வேண்டும். அது மட்டுமின்றி இஞ்சி சாகுபடி துவங்குவதற்கு முன்பு 60 முதல் 70 நாட்களுக்கு முன்னர் பலவகை விதைகள் ஏக்கர் ஒன்றுக்கு 30 கிலோ விதைத்து 4 முதல் 5 அடி உயரம் நன்கு வளர்ந்த பயிர்களை மடித்து உழவு செய்வதன் மூலம் 25 முதல் 30 டன் தாவரக் கழிவு சேர்ப்பது நிலத்தின் பெளதிக தன்மை/இயற்பியல் தன்மை மிக சிறப்பாக உருவாகி விடும். ஆக அங்கக் பொருட்களின் அளவு எந்த அளவு கூடுதலாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு நிலத்தின் உயிர் இயக்கம் அதாவது நுண் உயிர்களின் இயக்கமும் அதிகரிக்கும். அங்ககப் பொருட்களின் அளவு கூடுவது நில வளம் எனவும், நுண்உயிர்களின் இயக்கம் அதிகரிப்பது நில நலம் பேணுதல் எனவும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆக நிலவளம், நில நலம் ஆகிய இரண்டும் மிக முக்கிய ஆதார செயல்கள் ஆகும். இது அனைத்து வகை சாகுபடி பயிர்களுக்கும் பொருந்தும்.

 

குறிப்பாக இஞ்சி சாகுபடியில் அதன் தரமான விளைச்சலுக்கும் அதில் உள்ள மருத்துவ குணங்களின் அளவு மிகவும் கூடுதலாகவும் இருக்கும். இதற்கு ஆதாரமாக இருப்பது நிலவளமும், நில நலமும் ஆகும். பலவகை விதைகள் என்பது அந்த அந்த பகுதிகளில் எளிதாக கிடைக்கக் கூடிய தானிய வகை, பயறு வகை, எண்ணைவித்துக்கள் மற்றும் தழைச்சத்து கொடுக்கும் வகைகளின் விதைகள் சேகரித்து விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். ஆக இவை அனைத்தும் கலந்த விதைகள் ஏக்கர் ஒன்றுக்கு 25 கிலோ முதல் 30 கிலோ அளவு பயன்படுத்தலாம்.

பலவகை விதைகள் விதைத்து 30 முதல் 35 நாட்களில் நன்கு அடர்த்தியாக வளர்ந்த நிலையில் நுண் உயிர் கலவை உரம் தயாரித்து பயன்படுத்துவது மிக அவசியமாகும். நன்கு மக்கிய கம்போஸ்ட் அல்லது தொழுஉரம் அல்லது மண்புழு உரம் 70 கிலோ, மரத்தூள் 20 கிலோ, சாம்பல் 10கிலோ ஆக 100 கிலோ தயாரிக்கவும். இதில் அசோஸ்பைரிலம் 1 கிலோ, ரைசோபியம் 1 கிலோ, பாஸ்போ பாக்டீரியா 1 கிலோ, பொட்டாஷ் பாக்டீரியா 2 கிலோ, வேம் 10 கிலோ, சூடோமோனஸ் 1 கிலோ, வீ.விரிடி 1 கிலோ, வீ.ஹார்சியானம் 1 கிலோ, பேசிலஸ் சப்டிலஸ் 1 கிலோ, பேசிலோ மைசிஸ் 1 கிலோ ஆகியவை மேற்படி கலவை மீது தூவி நன்கு பிரட்டி கலவை தயாரிக்கவும், இந்த கலவையின் மேல் தொல்லுயிர் கரைசல் 10 லிட்டர், அமுத கரைசல் 6 லிட்டர், பஞ்சகவ்யா 7 லிட்டர், மோர் கரைசல் 7 லிட்டர், சினி2=1 லிட்டர், ஹியூமிக் அமிலம் 1 லிட்டர் ஆகியவை கலந்து கரைசல் தயாரித்து மேற்படி நுண்உயிர் கலவை உரத்தின் மீது தெளித்து நன்கு பிரட்டி கலவை தயாரித்து நிலத்தில் தூவி வாய்க்கால் பாசனம்/சொட்டுநீர்/தெளிப்பு நீர் பாசனம் செய்ய வேண்டும். அடுத்த 30 நாட்களில் பலவகை பயிர்கள் நன்கு வளர்ந்து வருவதற்கும், நுண்உயிர்கள் மிகுந்த அளவில் பெருக்கம் அடையவும் ஏற்ற சூழல் உருவாகிறது. இதனை நில நலம் பேணுதல் எனலாம்.

பலவகை பயிர்கள் 60 நாட்களில் நன்கு வளர்ந்த நிலையில், டிராக்டர் ரோட்டவேட்டர் பயன்படுத்தி மடிந்து உழவு செய்தால் ஏக்கர் ஒன்றுக்கு 25 டன் தாவரக் கழிவு சேர்க்கப்படுகிறது. இதனை நில வளம் பேணுதல் எனலாம்.

பின்னர் 15 செ.மீ உயரம் ஒரு மீட்டர் அகலம் மற்றும் தேவையான அளவு நீளமுள்ள மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும். மேட்டுப் பாத்திகள் ஒவ்வொன்றிற்கும் இடையில் 40 செ.மீ அடைவெளிவிட்டு அமைக்கவும். விதை இஞ்சி சுமார் 25 முதல் 50 செ.மீ நீளமும், 20 முதல் 25 கிராம் எடையுள்ளதாகவும், அதில் ஒன்று அல்லது இரண்டு முளைப்பு பருக்கள் கொண்ட இஞ்சித் துண்டுகளை வெட்டி எடுத்து விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 600 முதல் 750 கிலோ விதை இஞ்சி தேவைப்படும். விதைத் துண்டுகளை 100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் மோர்கரைசல், 10 லிட்டர் தொல்லுயிர்கரைசல், சூடோமோனஸ் 1 கிலோ அல்லது 500 மிலி கலந்து 30 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் நடவிற்கு பயன்படுத்த வேண்டும். இது பூசணநோய் கட்டுப்படுத்தும். மற்றும் வெர்ட்டி சீலியம் லெகானி 1 கிலோ மெட்டாரைசன் 1 கிலோ மேற்படி கரைசலில் கலந்து பயன்படுத்துவதன் மூலம் சாறு உறிஞ்சும் பூச்சிகள், செதில் பூச்சிகள் தாக்குதலிலிருந்து பாதுகாக்கலாம். பின்னர் மேட்டுப் பாத்திகளில் இஞ்சி துண்டுகளை நடவு செய்ய வேண்டும். இறவை சாகுபடியில் வரிசைக்கு வரிசை 40 செ.மீ இடைவெளியும் ஒவ்வொரு வரிசையிலும் 20 முதல் 25 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

பயிர் பராமரிப்பு

நடவு செய்து 30 முதல் 40 நாட்களில் பாசன நீரில் பயன்படுத்த ஏக்கர் ஒன்றுக்கு அசோஸ்பைரிலம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பேக்டீரியா, சூடோமோனஸ், வீ.விரிடி, வீ.ஹார்சியானம், பேசிலஸ் சப்டிலஸ், பேசிலோமைசிஸ் ஆகியவை ஒவ்வொன்றிலும் ஒரு கிலோ வீதமும், தொல்லுயிர் கரைசல் 100 லிட்டர், அமுத கரைசல் 10 முதல் 20 லிட்டர் பஞ்சகவ்யா 3 முதல் 10 லிட்டர், மோர் கரைசல் 3 முதல் 10 லிட்டர், EM2 1 முதல் 3 லிட்டர், ஹியூமிக் அமிலம் 1 முதல் 3 லிட்டர் ஆகியவைகளைக் கலந்து ஒரு நாள் வைத்திருந்து அடுத்த நாள் பாசனத்தில் பயனபடுத்த வேண்டும். இதற்கு நிலவள ஊக்கி எனப்படும். மாதம் ஒரு முறை வீதம் 6 முறை பயிர்வளர்ச்சியின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும்.

அல்லது துவக்கத்தில் விளக்கியுள்ளபடி நுண்உயிர் கலவை உரம் தயாரித்து பயன்படுத்தலாம். மாதம் ஒரு முறை வீதம் 6 முறை பயிரின் வளர்ச்சி தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். வேம் 1 கிலோ பயன்படுத்தவும். இஞ்சி சாகுபடியில் மேட்டுப் பாத்தியில் மூடாக்கிடுதல் மிகமிக அவசியமாகும். இஞ்சித் துண்டுகளை விதைக்கும் தருணத்தில் ஏக்கர் ஒன்றுக்கு 5 முதல் 6 டன் இலை, தழைகளை மேட்டுப் பாத்தியின் மீது பரப்புதல் அவசியம். இவ்வாறு பரப்பிய தழைகள் மட்கி முடியும் தருணம் மேலும் 45 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை மூடாக்கு செய்தல் மிக அவசியமாகும்.

நுண் உயிர்கலவை உரம் பயன்படுத்தும் போது சருவுமூடாக்கை விலக்கி நுண்உயிர்கலவை உரம் இட்டு மீண்டும் அதனை மூடுவது மிக அவசியமாகும். மூடாக்கு பயன்படுத்துவதால் மேட்டுப் பாத்தியில் சூரிய ஒளி நேரடியாகபடுவது தவிர்க்கப்படும். மண்ணில் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது.

மழைக்காலங்களில் நிலவள ஊக்கி பயன்படுத்த இயலாது. நுண்உயிர்கலவை உரம் பயன்படுத்துவது சாலச் சிறந்தது. மழை மிக அதிகமாக பெய்யும் சந்தர்ப்பங்களில் நுண்உயிர்கலவை உரம் 15 நாட்கள் இடைவெளியிலும் பயன்படுத்த வேண்டும். உயிர்ம இடு பொருட்களின் அளவையும் கூடுதலாக பயன்படுத்த வேண்டும்.

பொதுவாக இஞ்சி சாகுபடியில் பரவலாக தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்தப்படுகிறது. நிலவள ஊக்கியை இதனுடன் கலந்து தெளிப்பது மிக நல்ல பலன் அளிக்கும். இம்முறையில் மாதம் ஒரு முறை பயன்படுத்த கொடுத்துள்ள நிலவள ஊக்கியை 15 நாட்களுக்கு ஒரு முறை சரிபாதி அளவாக பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்துவது மூலம் இஞ்சி பயிரைத் தாக்கும் சாறு உறிஞ்சு பூச்சிகள், இலை தண்டுகளை சேதம் செய்யும் புழுக்கள் மற்றும் பூசண நோய்கள் கட்டுப்படும்.

பயிர் பாதுகாப்பு

செதிள் பூச்சி, இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான் போன்றவற்றைக் கட்டுப்படுத்த பாசியாளா, மெட்டாரைசன் பயன்படுத்த வேண்டும். பூசண நோய் தாக்குதல் கட்டுப்படுத்த சூடோமோனஸ் பயன்படுத்த வேண்டும்.

100 லிட்டர் கரைசல் தயாரிக்க
  1. தொல்லுயிரி கரைசல் – 10 லிட்டர்
  2. அமுதகரைசல் – 10 லிட்டர் (அல்லது) பஞ்சகவ்யா 3 முதல் 5 லிட்டர்
  3. மோர் கரைசல் – 3 முதல் 5 லிட்டர் + EM2 1 லிட்டர்
  4. பூச்சி விரட்டி கரைசல் – 5 முதல் 10 லிட்டர்
  5. பாசியானா – 2 முதல் 3 கிலோ அல்லது 350 மில்லி – 500 மில்லி
  6. மீதம் நீர் சேர்த்து 100 லிட்டர் கலவை தயாரித்து பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு

பயிருக்கு தெளிப்பு செய்வதற்கு முந்நாள் , தொல்லுயிர் கரைசலில் பாசியாளாவும் அமுத கரைசலில் மெட்டாரைசமும் மோர் கரைசலில் சூடோமோனஸ் கலந்து வைக்கவும். அடுத்த நாள் தெளிக்கும் போது மேற்படி கரைசல்களை வடித்து பயன்படுத்தலாம். கரைசலின்அடிப்பகுதியில் கீழ்ப்படிவாக தங்கியுள்ள அடர்கரைசலை மக்கிய குப்பையில் கலந்து நுண் உயிர்கலவை உரம் தயாரிக்கும்பொழுது இதனையும் சேர்த்து கலந்து பயன்படுத்தலாம்.

தெளிப்பிற்கு மற்றொருமுறை

ஒவ்வொருமுறையும் மேற்படி குறிப்பிட்டுள்ள வகையில் தெளிப்பதில் உயிர்மவெளி இடுபொருட்கள் (Bio Products) விலைக்கு வாங்கி பயன்படுத்தினால் இடுபொருள் செலவு கூடிவிடும். இந்த செலவை குறைக்க கீழே விவரிக்கப்பட்டுள்ள முறையில் கரைசல் தயாரிக்கவும்.

வேப்ப எண்ணெய் கரைசல் தயாரித்தல்
  1. வேப்ப எண்ணை – 1 லிட்டர் திரவ வடிவ சோப்பு கலவை – 200 மி.லி வேப்ப எண்ணெயில், திரவ வடிவ சோப்பு கலவை சேர்த்து குச்சியால் நன்கு கலக்கவும். கரைசல் பழுப்பு நிறமாக மாறும். வேப்ப எண்ணை நீரில் கரையக் கூடியதாக மாறும்.
  2. புங்கன் எண்ணை கரைசல் புங்கன் எண்ணை – 1 லிட்டர் திரவ வடிவ சோப்பு கலரை – 200 மி.லி

மேற்குறிப்பிட்ட முறையில் நன்கு கலக்கினால் புங்கன் எண்ணை நீரில் கரையக்கூடியதாக மாறும்.

தெளிப்பதற்கு 100 லிட்டர் கரைசல் தயாரித்தல்
  1. வேப்ப எண்ணை கரைசல் – 350 மி.லி
  2. புங்கன் எண்ணை கரைசல் – 350 மி.லி
  3. தொல்லுயிர் கரைசல் – 10 லிட்டர்
  4. பூச்சி விரட்டி கரைசல் – 5 முதல் 10 லிட்டர்
  5. மீதம் நீர் சேர்த்து 100 லிட்டர் கலவை தயாரித்து பயன்படுத்த வேண்டும்.

    பயிர் பாதுகாப்பில் தெளிப்பதற்கு துவங்கும் நேரம் முதலில் உயிர்ம இடுபொருட்கள் பயன்படுத்தும் கலவை பக்கம் 6ல் உள்ள படி தயாரித்து தெளிக்கவும். பின்னர் அடுத்தமுறை வேப்ப/புங்கன் எண்ணை மேலே விவரித்துள்ள முறையில் தயாரித்து தெளிக்கவும். மேற்படி முறையில் மாற்றி மாற்றி தெளிப்பதன் மூலம் பூச்சி நோய் கட்டுப்படும் சிலவும் குறையும்.

    பூச்சி நோய் தாக்குதல் வருமுன் காப்பாக தெளிப்பு செய்யும் போது வெளி இடுபொருட்களை குறைந்த அளவிலும், தாக்குதல் அதிகமாக இருக்கும் பாதகமான சூழலில் வெளி இடுபொருட்களை அதிக அளவிலும் பயன்படுத்த வேண்டும்.

    இஞ்சி சாகுபடியில், பாதகமான சூழலில் மெது அழுகல் நோய் தாக்குதல் மிக அதிகமாக இருக்கும் நேரங்களில் நுண்உயிர்கலவை உரம் தயாரித்து அதில் பயன்படுத்தப்படும் உயிர்ம இடுபொருட்களின் அளவுகளை இரட்டிப்பாக்கி பயன்படுத்த வேண்டும்.

    மெதுஅழுகல்நோய் தாக்குதல் துவங்கிய பகுதிகளில் உள்ள பயிர்களுக்கு நுண்உயிர்கலவை உரத்தை வாரம் ஒருமுறை வீதம் 3 முறைகள் பயன்படுத்த வேண்டும். நோய் தாக்கிய பயிர் அருகில் 12 செ.மீ குழி செய்து அதில் நுண் உயிர் கலவை உரம் இட்டு மண்ணால் மூடி விட வேண்டும். அதன் மேல் சருவு மூடாக்கும் பரப்ப வேண்டம். இவ்வாறு செய்வதன் மூலம் மெது அழுகல் நோய் மற்ற பயிர்களுக்கு பரவாமல் கட்டுப்படுத்த இயலும். அதாவது “நுண் உயிர் கோட்டை சுவர்” பாதிக்கப்பட்ட பகுதி சுற்றிலும் அமைக்கப்படுகிறது. இது இயற்கை வேளாண்முறையில் மட்டும் தான் சாத்தியமாகும்.

    அறுவடை

    இஞ்சியை அறுவடை செய்த பின்னர் பச்சையாக விற்பதனால் இஞ்சி விதைத்து 6ஆம் மாதம் முதல் அறுவடை செய்ய துவங்க வேண்டும். நன்கு காய்ந்த இஞ்சி தயாரித்து விற்பனை செய்ய இருப்பின் இஞ்சி விதைத்த 245-250 நாட்களில் அறுவடை செய்யலாம். பச்சை இஞ்சியாக விற்பனை செய்ய இஞ்சி அறுவடை செய்த உடன் அவைகளை நீரில் நன்கு கழுவி மண் மற்ற அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் வெய்யிலில் ஒரு நாள் முழுமையாக உலர்த்தி இஞ்சியின் மேல் ஈரப்பதம் உலர்ந்த பின்னர் விற்பனை செய்ய வேண்டும். காய்ந்த இஞ்சி அறுவடை செய்ய அதன் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய துவங்கும். இந்த நிலையில் அறுவடை செய்யவும்.

Leave a Reply